மத்திய அரசு பணியிடங்களில் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாது காப்புத்துறை மற்றும் இரயில்வே துறையில் மிக அதிகமான பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன.இரயில்வே துறையில் 2.68 லட்சமும், பாதுகாப்புத்துறையில் 1.20 லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளன.பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சி எதுவும் அரசினால் செய்யப்படவில்லை. மாறாக, இருக்கிற பணியிடங்களையும் அழிப்பதற்கான முயற்சிதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு விவரப்படி மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதம் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆயுஷ்மான் திட்டத்தில் 50 கோடி மக்களுக்கு 1 வருட பிரீமியமாக ரூபாய் 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒதுக்கியிருக்கக்கூடிய தொகை மக்களுக்குதலா 24 ரூபாய் மட்டுமே. இதனை வைத்து மருத்துவ காப்பீட்டை எப்படி உறுதி செய்ய முடியும்? உண்மையிலேயே நாட்டு மக்களின் தேக ஆரோக்கியத்தில் இந்த அரசிற்கு அக்கறை இருக்கு மென்றால், இத்திட்டத்தினை முறையாக அமலாக்க முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும். மேலும், இதன் மூலமாக இத்திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும்.
பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியர் பணியிடங்கள் 18 ஆயிரம் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கு அரசு தயாராக இல்லை. உண்மையில், சுகாதாரம், கல்வித்துறை சார்ந்த வளர்ச்சி குறியீட்டில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி என்பது வேலைவாய்ப்போடு இணைந்த தாகும். இத்துறைகளில் அரசின் முதலீடு அதிகரிக்கும் போது வேலைவாய்ப்பும் உயரும். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு உயரும் போது வேலைவாய்ப்பு புதியபிரிவினருக்கு கிடைக்கும். இதன்மூலம் வாங்கும்சந்தையில் ஏற்படும் வளர்ச்சி மேலும் புதிய வேலை வாய்ப்புகளை தோற்றுவிக்கும். வேலைவாய்ப்பிற்கும் சந்தைக்குமான இந்த மிக முக்கியமான உறவினை புரிந்துகொள்ளாமல் கல்வி, சுகாதாரத்தை அரசு முற்றிலும் கைகழுவி விடுவது என்பது மக்கள் நலனுக்கு பெரும் கேடுவிளைவிப்பதாக உள்ளது.ஆனால் அதைத்தான் மோடி அரசு 5 ஆண்டு காலம் செய்தது; இளைஞர்களை வஞ்சித்தது.
எஸ்.பாலா