tamilnadu

உச்சநீதிமன்றம் அருகே 144 தடை உத்தரவு

புதுதில்லி, மே 7-தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய வீட்டில் உதவியாளராக பணியாற்றி பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார். ஆனால் இதை மறுத்த தலைமை நீதிபதி, இந்த புகாரின் பின்னணியில் சதி இருப்பதாக கூறினார்.இதைத்தொடர்ந்து, இந்த புகார் பற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 23-ந்தேதி அமைத்து உத்தரவிட்டது.இந்த குழுவின் முன்பு விசாரணைக்காக ஆஜராகு மாறு புகார் கூறிய பெண் ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்தநிலையில் புகார் கூறிய பெண், இந்த குழுவின் நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்றும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் அடிப்படையில் தன்னுடைய புகாரை இந்த குழு நியாயமாக விசாரிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறி இருந்தார்.இதைத்தொடர்ந்து நீதிபதி என்.வி.ரமணா 25-ந்தேதியன்று மூவர் குழுவில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த மாதம் 26, 29 மற்றும் 30-ந்தேதிகளில் புகார் கூறிய பெண் இந்த குழுவின் முன்பு ஆஜரானார். பின்னர் கடந்த 1-ந்தேதியன்று விசாரணை குழுவின் மீது குறை கூறிய அந்த பெண், ஆஜராக மறுப்பு தெரிவித்தார்.மே 1-ந்தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.விசாரணையின் முடிவில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் புகாரை 3 நீதிபதிகள்குழு தள்ளுபடி செய்தது. இந்த மூவர் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது.இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களுடன் மகளிர் நல ஆர்வலர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.