tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர் நிலை

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

மதுரை,மே 27- சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கக்கேடான வகையில் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை சாடியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செவ்வாயன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கும் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த  வழக்கின் விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.