சென்னை,மே 8- ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,அதைப்பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு மதுக்கடைகளை மே 7 அன்று திறந்தது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக கூறி,இதற்கு நியாயம் கற்பித்து டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
பெரும்பாலான கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சமூக விலகல் இன்றி விற்பனை நடைபெற்றது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் தன்னெழுச்சியாக வந்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சமூக விலகல் இல்லாமல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்றதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும் ஆகையால் கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டது.