கொழும்பு:
இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் பலியாகினர். நிரப்பட்ட குண்டுகளுடன் கொழும்புக்குள் லாரி மற்றும் சிறிய வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக தற்கொலைப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் என்பதும், அவர்களை மூளைச்சலவை செய்து இந்த கொடூரச் செயலுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூழலை சரிவர கையாளாத காரணத்தால் இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.