இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு உளவுத்துறையின் மோசமான செயல்பாடே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் 10 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை, தாக்குதல் குறித்தும் தெளிவான விபரங்களுடன் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை நிர்வாகத்தின் அலட்சியத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அறிவிப்பிலும் இலங்கை அரசு தவறு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் மொத்தம் 359 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 253 மட்டுமே என்று இலங்கை சுகாதாரத்துறை இயக்குனர் அனில் ஜெய்சிங்கே உறுதிப்படுத்தியுள்ளார். 359 பேர் இறந்ததாக கூறப்பட்டது கணக்கிடுவதில் நேரிட்ட தவறு என்று கூறிய அவர், அடையாளம் காண முடியாத அளவில் உடல்கள் மீட்கப்பட்டதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவாலயங்களை விட நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் உடல்கள் மிகவும் சிதைந்து இருந்ததாக கூறிய ஜெய்சிங்கே, உடல் பாகங்களை கொண்டு கணக்கிட்டதில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 கூடுதலாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அனைத்து பிரேத பரிசோதனைகளும் முடிவடைந்ததும் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்து, சரிபார்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் உயிரிழந்தவர்களில் உள்நாட்டினர் எத்தனை பேர், வெளிநாட்டினர் எத்தனை பேர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், 40 வெளிநாட்டினர் உயிரிழந்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல இடங்களில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று இலங்கையின் புகோடா பகுதியில் உள்ள நீதி மன்றத்தில் குண்டு வெடித்தது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலை ஆஸ்திரேலியா இங்கிலாந்துபோன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.