tamilnadu

img

அலிமுதீன் அன்சாரியைக் கொன்ற பசு குண்டர்கள் அப்பாவிகளாம்..

ராஞ்சி:

கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில், அலிமுதீன் அன்சாரி என்ற கால்நடை வியாபாரியை, பசு குண்டர்கள் கும்பலாக திரண்டு, மிகக் கொடூரமாக அடித்துக் கொண்டனர்.


அலிமுதீன் அன்சாரி, மாட்டிறைச்சிக்காக பசுக்களை கடத்திச் செல்வதாக புரளியைக் கிளப்பி, சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இந்த படுகொலையை அரங்கேற்றினர். அவரது வாகனத்திற்கும் தீ வைத்தனர்.அலிமுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்போது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பசு குண்டர்களை கைது செய்தனர். இவர்களில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. ஆனால், மேல்முறையீட்டில், இவர்களில் 8 பேருக்கான ஆயுள் தண்டனையை ரத்து செய்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.


இதையடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த, பசு குண்டர்கள் 8 பேரும், மத்திய சிவில் விமான போக்குவரத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்காவின், ஹசாரிபாக் வீட்டிற்கு சென்றனர். அவர்களை அமைச்சர் ஜெயந்த் சின்கா, மாலை அணிவித்து வரவேற்றதுடன், இனிப்பு ஊட்டியும் மகிழ்ந்தார். தடபுடலான விருந்தும் வைத்து கௌரவித்தார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவரே விருந்தளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


எனினும் அப்போது விளக்கம் அளிக்காத ஜெயந்த் சின்கா, தற்போது மோடி ஆட்சி முடியும் தருவாயில் பதிலளித்துள்ளார். அதில், அலிமுதீனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் மிகவும் ஏழைகள் என்றும் கூறியுள்ளார். இதன்காரணமாகவே அவர்களின் வழக்குச் செலவுக்கு பணம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு உதவியதற்காக 8 பேரும் வீடு தேடி வந்து நன்றி தெரிவிட்டுவிட்டு, தங்களுக்கு மாலை அணிவித்து பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாலேயே, தான் அவர்களுக்கு மாலை அணிவித்ததாகவும் கூறியிருக்கும் ஜெயந்த் சின்கா, அதேநேரம் கொல்லப்பட்ட அலிமுதீன், அவருடைய மனைவி மரியம் ஆகியோருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.