ஜெய்ப்பூர்:
இந்தியர்கள் அனைவரும் ஒரே டிஎன்ஏ வழி வந்தவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். “அனைத்து இந்தியர்களும் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே டிஎன்ஏ-வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த 40,000 ஆண்டுகளாக அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-வும் ஒன்றுதான்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், “பசு புனிதமான விலங்குதான் என்றாலும், அதன் பெயரில் மனிதர்களை தாக்குவது இந்துத்துவா ஆகாது; முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான இந்துவாகவும் இருக்க முடியாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.அடுத்தடுத்து வரவுள்ள 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனத்திற்கொண்டு இவ்வாறு அவர் வாய்ஜாலம் காட்டியிருந்தார்.இந்நிலையில்தான், அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-வும் ஒன்றுதான் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த பெண் சாமியாரான சாத்வி பிராச்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் டிஎன்ஏ-வை இந்துக்களிடையே ஒருபோதும் காண முடியாது” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், தவுஸாவில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியிருக்கும் சாத்வி பிராச்சி, “ஒருவேளை இந்திய மக்கள் ஒரே டிஎன்ஏ-வைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் பசு இறைச்சி சாப்பிடு
வோரின் டிஎன்ஏ-வை நம்மிடையே ஒருபோதும் காண முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை மனைவிகளும் இருக்கலாம்.. குழந்தை 2-தான்!
இதே கூட்டத்தில் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்தும் சாத்வி பேசியுள்ளார். அதில், “மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வசதிகள் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ள பிராச்சி, “உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் பரவாயில்லை, இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்” என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.