மும்பை:
“இந்தியாவில் இருக்கும் 130 கோடி பேரும்- அவர்கள் எந்தமதத்தை, மொழியை பின்பற்றினாலும்; அவர்கள் இந்துக்கள்தான்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.குறிப்பாக, பாஜக கூட்டணி யில் இருக்கும் இந்திய குடியரசுக்கட்சியின் (அத்வாலே பிரிவு) தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, பகவத் பேச்சை கண்டித்துள்ளார்.“அனைத்து இந்தியர்களும் இந்துக்கள்தான் என்று சொல்வது சரியல்ல. ஒரு காலத்தில்நம் நாட்டில் இருந்தவர்கள்- இந்துக்கள் உள்படஅனைவரும் பவுத்தர்களாக இருந்தார்கள். எனவே, ‘அனைவரும் இந்தியர்கள்’ என்று சொன்னால், அது சரியானது. நம் நாட்டில் பவுத்தர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், ஜைனர்கள், லிங்காயத்துகள் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்” என்று அத்வாலே கூறியுள்ளார்.இதேபோல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மஜ்லிஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசிஉள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.“ஆர்எஸ்எஸ் இந்தியாவில் ஒரு மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியல் சட்ட சாசனம் இருக்கும் வரை அது நிறைவேறாது. இந்த நாடு அனைத்து மதத்தையும் ஏற்றுக் கொள்கிறது,” என்று ஒவைசி கூறியுள்ளார்.