tamilnadu

img

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி காவலர்கள் விடிய, விடிய விசாரணை- அதிர்ச்சி தகவல் அம்பலம்

சேலம், மே 8-நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்ததுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமியிடம் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில்,  இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளகுழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன் மற்றும் ராஜா சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.இவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்கள் அருள்சாமி ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி செவ்வாயன்று நாமக்கல் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்தனர். பின்னர் இரவு 9 மணி அளவில் விசாரணை தொடங்கிய அதிகாரிகள் விடிய, விடியதொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளும், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் குழந்தை விற்பனை செய்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், கொல்லிமலை பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்ததாகவும், குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கி 2 முதல் 4 லட்சம் ரூபாய்வரை விற்பனை செய்ததுவிசாரணையில் தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து தற்போது சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக அமுதா, அருள்சாமி, முருகேசன் ஆகியோரிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.