சேலம்:
நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தனுஷ் (20) தேர்வு பயத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (52). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு நிஷாந்த் (22) மற்றும் தனுஷ் (20) என்ற இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த நிலையில் இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று 3 ஆவது முறையாக, நீட் தேர்வு எழுத சனியன்று இரவு முழுவதும் படித்துள்ளார். ஆனால், தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு ஞாயிறன்று நடைபெற இருந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரில் அஞ்சலி-நிதியுதவி வழங்கல்
இதற்கிடையே, மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து அவரது இல்லத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ரூ.10 லட்சத்தை நிவாரணமாக மாணவனின் குடும்பத்தாரரிடம் வழங்கினார்.
(முதல்வர் இரங்கல் - 5)