சேலம், ஏப்.14-சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியில் பாவடி தெரு, குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேட்டூர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை. இந்நிலையில் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பட்டை கோவில் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மேட்டூர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி, பாட்டிலில் குடிநீர் நிரப்பி எடுத்து வந்ததை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து இருக்கலாம் எனவும், உடனே எந்த பகுதியில் குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என கண்டறிந்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் களைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.