நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்காத சோகத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மற்றும் ஆனந்தி தம்பதியினருக்கு அகிலா (20) மற்றும் புனிதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் அகிலா பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். ‘மருத்துவராக வேண்டும்’ என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் புனிதாவிற்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து புனிதா பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில், மனமுடைந்த அவர் செவ்வாயன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர், புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.