districts

img

தாயின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தாயின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் தாய், தந்தை இருவரில் யாருக்கு 1964ஆம் ஆண்டுக்கு முன் புதுச்சேரியில் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தாலும், அவர்களின் அடிப்படையில் பூர்வீக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ்கள் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் ஸ்ரீநிஜா என்ற மாணவிக்கு ஆதிதிராவிடர் சான்றிதழை வருவாய்த்துறை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இச்சாதி சான்றிதழின் அடிப்படையில் மாணவிக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்த மாணவி நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், இவரை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாணவி ஸ்ரீநிஜா தரப்பில் மருத்துவ படிப்புக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வில் எஸ்.சி. இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் வழங்க வேண்டும் என சென்டாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை சென்டாக் நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில், அதனை கண்டித்தும், மாணவி ஸ்ரீநிஜாவுக்கு எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க கோரியும் முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, மாணவி ஸ்ரீநிஜாவுக்கு தாயின் பூர்வீக அடிப்படையில் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை கொண்டு எம்.பி.பி.எஸ் சீட் வழங்க வேண்டும் எனக் கோரி ஸ்ரீநிஜா தரப்பில் வழக்குரைஞர் ஸ்டாலின் அபிமன்யு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவி ஸ்ரீநிஜாவுக்கு 3ஆம் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ் சீட் வழங்க வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச வருவாய்த்துறை மற்றும் சென்டாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.