சேலம்
சேலம் வனப்பகுதி காட்டுக்கோவிலில் கல்லூரி மாணவியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரும் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இச்சம்பவம் சாதிஆணவக்கொலையாக இருக்கலாம் என்பதால்தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராம நாயக்கன்பாளையம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் பாஸ்குமார். ஆத்தூர் காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வகுப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் செம்மாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கவிதா என்ற மாணவி பயின்றுவந்துள்ளார். நாளடைவில் பாஸ் குமாருக்கும்கவிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள்தொடர்ச்சியாக காதலித்து வந்த பின்னணியில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளனர். பாஸ் குமார் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் பாஸ் குமார் 5-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றவர் திரும்பி வரவில்லை. ஆகஸ்டு 6ம் தேதி காலை 7.30 மணிக்குகள்ளக்குறிச்சி காவல்துறையினர் பாஸ் குமாரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு
கொண்டு, தங்கள் மகன் விபத்தில் சிக்கியுள்ளார் உடனடியாக கிளம்பி வர வேண்டும்எனவும் நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் முதலில் கேட்டுள்ளனர். சற்றும் இதை எதிர்பார்க்காத பெற்றோர், எதற்காக இப்படிக் கேட்கிறீர்கள் என காவல்துறையினரிடம் கேட்டதற்கு பின்பு உங்கள் மகன்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் உடலை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிஉள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.பாஸ் குமாரின் குடும்பத்தினர் எந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இடத்தை சொல்லுங்கள் நாங்கள்வருகிறோம் என கேட்டதற்கு காவல்துறையினர் கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். பதறிப்போன இவர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அவசர அவசரமாக பாஸ் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து அனுப்பி விட்டனர். அவரது உடல் ராமநாயக்கன்பாளையம் காமராஜர் நகர் பகுதியில் எரியூட்டப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி விசாரணை
இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமையில் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ராமசாமி, சிபிஎம் சேலம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன் குமார் ஆகியோர் இறந்த தலித் மாணவர் பாஸ் குமார் இல்லத்திற்கு நேரில் சென்றுகுடும்பத்தினரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர்.அவர்கள் கூறியதன் அடிப்படையில் பாஸ் குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது,ஏனெனில் பாஸ்குமார் வீட்டிற்கும் தற்கொலை செய்துகொண்ட இடத்திற்கும் சுமார் ஒரு மணி நேரம் பயண தொலைவுஉள்ளது. ஆனால் சம்பவம் தெரிந்தவுடன் பாஸ் குமாரின் குடும்பத்தினர் அந்த இடத்திற்கு வருகிறோம் எனகாவல் துறையினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறையினர் அதனை மறுத்து உடலை இவர்களுக்கு தெரியாமலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் இறந்தகவிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் மகளை பறிகொடுத்து விட்டோமே என்றஎந்தவித பதற்றமும் கவலையும் இல்லை. முதலில் தகவல் கூறிய காவல்துறையினர் பாஸ் குமார் குடும்பத்தினரிடம் தாங்கள்என்ன சாதி என திரும்பத் திரும்ப கேட்டது மேலும் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் பாஸ் குமார் சடலம் தூக்கில் தொங்கியபடி தரையில் படும்படி இருந்துள்ளது. அவரின் காலுக்கு அடியில் மாணவியின் சடலம் இருந்துள்ளது .இவர்கள் மரணம் சாதிய ஆணவக் கொலையாக இருக்கக்கூடும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.இந்த சம்பவத்தில் அரசு உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறியவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ஆணவ படுகொலையை மூடி மறைக்கக் கூடாது என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.