மதுரை, செப்.24- பள்ளி மாணவியை நடுரோட்டில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம் மகன் பாலமுருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிப்பாண்டி மகள் சித்ராதேவியை (9ஆம் வகுப்பு மாணவி) தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலமுருகன் சாலையில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த சித்ராதேவி 16.2.2018 அன்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 27.2.2018 அன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா, கொலை குற்றத்திற்காக பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை, மாணவியை வழிமறித்த குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வியாழனன்று தீர்ப்பளித்தார்.