சென்னை
1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இந்தியன் படம் மெஹா ஹிட் அடித்தது. இந்த படத்தின் 2-வது பாகம் முழுவீச்சில் தயாராகி வந்த நிலையில், கடந்த புதனன்று சென்னைக்கு அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகளுடன் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
படப்பிடிப்பு இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கடந்த வெள்ளியன்று கைது செய்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் காயம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்து இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.