tamilnadu

img

கூடுதல் பொருட்கள் வாங்கினால்தான் அரசு நிவாரணத் தொகை... ரேசன் கடையில் கெடுபிடி

இராஜபாளையம்:
இராஜபாளையம் பகுதியில் உள்ள  நியாய விலைக் கடையில் பணம் அளித்து கூடுதல் பொருட்கள் வாங்கினால் மட்டுமே தமிழக அரசின் நிவாரண தொகை உள்ளிட்ட, உணவு பொருட்கள் வழங்கப்படும் என விற்பனையாளர்கள் கூறுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

இராஜபாளையத்தில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி.. இங்குள்ள  முதலாவது நியாய விலைக் கடையில் 1303க்கும் மேற்பட்ட  குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை,  சமையல் எண்ணை உள்ளிட்ட  பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.ஆனால் பணம் அளித்து பொரிகடலை, சேமியா, ரவை, மைதா மாவு உள்ளிட்ட   ஏதாவது ஒன்று வாங்கினால் மட்டுமே பணம் மற்றும் இலவச பொருட்கள் வாங்க முடியும் என விற்பனையாளர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. சிலர் பணம் கொடுத்து இலவச பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், கூலி தொழிலாளர்கள் சிலர் கூடுதல் பொருட்கள் வாங்க பணம் இல்லை என கூறியுள்ளனர்.  எனவே, அவர்களை  கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பினாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலையின்றி இருப்பவர்களிடம் எப்படி பணம் இருக்கும் என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.   இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரெங்கசாமியிடம் கேட்ட போது, கூடுதல் பொருட்கள் வாங்க இனி வற்புறுத்தக் கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.