tamilnadu

img

திண்டுக்கல்லில் ரூ.50 கோடியில் தோல்கள் அழியும் நிலை

திண்டுக்கல் ,ஏப்.28- கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் பாரம்பரிய தொழிலான தோல் பதனிடும் தொழில்  முடங்கியுள்ளது. சுமார் ஐம்பது கோடி ரூபாய் பெறுமான தோல் தேக்கமடைந்து அழுகும் நிலையில் உள்ளது என சிறுதொழில் அதிபர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:  திண்டுக்கல்லில் பாரம்பரிய தொழிலான பூட்டு, சுருட்டு ஆகிய தொழில்களுக்கு அடுத்தபடியாக தோல் பதனிடும்  தொழிலும் மிக முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது

திண்டுக்கல் பேகம்பூர், சவேரியார் பாளையம், வத்தலகுண்டு சாலை ,தோமையார்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தோல் தொழிற்சாலைகளில் ஏழை எளிய மக்கள்தான் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது  இந்த காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் முறையாக பதப்படுத்தப்படாமல் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு குறு தொழில் முதலாளிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்

 இங்கு பதப்படுத்தப்படும் தோல் ஆம்பூர் ,வாணியம்பாடி ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்பட்டு முழுமைபடுத்தப்படுகிறது. ஆனால் தற்போது கைவசம் உள்ள தோல்கள் அப்படி அனுப்ப முடியாத சிக்கலில் உள்ளதால் கோடிக்கணக்கான மதிப்பு மிக்க தோல்கள் இயற்கையாகவே அழுகி பயன்படாமல் போக வாய்ப்புள்ளது.  மேலும் தொழிற்சாலை இயங்காததால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதாக வாய்ப்புள்ளது. விரைவில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் .தொழிற் சாலைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது.

 நலவாரியத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த பணம் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் தோல் தொழிற்சாலை முதலாளிகளிடம் முன்பணமாக கேட்டுப்பெறலாம் என்றால் சிறு முதலாளிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது  தொழிற்சாலை  இயங்கினால்தான் பேகம்பூர், சவேரியார் பாளையம் ,தோமையார்புரம், வத்தலகுண்டு சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் இயல்புநிலைக்கு வரும்.  கொரோனா தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக பேகம்பூர் உள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் கணேசன் கூறும்போது, திண்டுக்கல்லில் பிரதானமான தொழிலாக விளங்குவது தோல் தொழில் .இந்த தொழிலில் 2000 பேர் நேரடியாகவும் 3 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள்  தினசரி 400 முதல் 500 ரூபாய் வரை தினக்கூலியாக பெற்று வருகிறார்கள். மேலும் வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அரசு தற்போது அறிவித்துள்ள ஆயிரம் மற்றும் நலவாரிய தொழிலாளர்களுக்கு என வழங்கப்படும் ரூ.2000 போதுமானதல்ல. ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொள்கிறது மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக ரூ.50 கோடி பெறுமான தோல் தேக்கம் அடைந்து அழுகும் நிலையில் உள்ளது .இந்த தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி விட்டு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்  பொருட்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகளை திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இலமு