புதுக்கோட்டை:
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடிவிட்டு, அவற்றை அம்மா உணவகங்கள்,அம்மா காய்கறிக் கடைகளாக மாற்றலாம்என்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா என்னும் தொற்றுநோய் காரணமாக சமூகப்பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக ஊரடங்கு அமல் செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைகளை மாநிலத்தில் திறந்தது பேரதிர்ச்சியாக இருந்தாலும்கூட, தற்பொழுது நீதிமன்றம்அதற்கு தடை விதித்துள்ளது. உண்மையில் இந்த தீர்ப்பு அரசுக்கு நன்மை அளிக்கக்கூடிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டியிருக் கின்றது. தயவுசெய்து அதனை மீண்டும் திறப்பதற்கு ஆலோசிக்காமல் மூடியது, மூடியதாகவே இருக்கட்டும் என்ற நிலையில் சிறந்த முடிவு எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, அதே இடத்தில் தேவைக்கேற்ப, அதனை அம்மா உணவகங்களாகவும், அம்மா காய்கறிக் கடைகளாகவும் மாற்றினால், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்துமக்களும் பயன்படுவதோடு, விவசாயிகள் தங்களுடைய வேளாண் பொருட்களை நேரடியாக அரசிடம் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், குறைந்த விலையில் மக்களுக்குத் தரமான காய்கறிகள் கிடைப்பதற்கும் வழியாக அமைவதோடு, வேளாண் உற்பத்தி மிகுந்த அளவில் பெருகும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.