tamilnadu

img

மக்களின் கையில் நேரடியாக பணத்தை கொடுங்கள்.... மோடி அரசுக்கு மன்மோகன் சிங் புத்திமதி

புதுதில்லி:
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, இந்தியாவில் ஒரு மனிதார்த்த நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதை சரிசெய்கிறோம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் மக்களின் வலியை மேலும் அதிகப்படுத்தி விட்டதாகவும் முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிரச்சனைகளிலிருந்து மீண்டுவர வேண்டுமானால், மூன்று முக்கிய நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்தாக வேண்டும் ஆலோசனை வழங்கியுள்ள மன்மோகன் சிங், அந்த நடவடிக்கைகள் என்ன? என்று விரிவாக விளக்கியும் இருக்கிறார்.
பிபிசி தொலைக்காட்சிக்கு, இ-மெயில்மூலம் அளித்துள்ள பேட்டியில் மன் மோகன் சிங் மேலும் கூறியிருப்பதாவது:

மார்ச் மாத இறுதியில்தான் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் முடக்க நிலை அமலானதுஎன்றாலும் ஆரம்பத்தில் இருந்தே பிரச் சனை பேசப்பட்டது. ஆனால், அவசரகதியாக, ஊரடங்கை அமல்படுத்தியது, மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. மற்ற நாடுகள் செய்ததைத்தான், இந்தியா தானும் செய்தது.  அந்த சூழ்நிலையில் ஊரடங்கு அமல் செய்தது தவிர்க்கமுடியாத நிலையாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும் அரசின் அதிர்ச்சியூட்டும் மோசமான அணுகுமுறையால் மக்கள் கடும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.  

திடீரென கடுமையான ஊரடங்கு அறிவித்தது சிந்தனையற்ற புத்திசாலித்தனமில்லாத ஒரு செயல்பாடு ஆகும். ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறுவர் என யாரும் முன் கூட்டி ஊகிக்க
வில்லை.இந்தியாவில் நோய்த் தொற்று தொடங்குவதற்கு முன்பிருந்தே பொருளாதார மந்த நிலை அதிகளவில் காணப்பட் டது. கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான 4.2 சதவிகித ஜிடிபி வளர்ச்சியானது, கடந்தபத்தாண்டுக் காலத்தில் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.2020 - 21 நிதியாண்டிலும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பெருமளவு குறையும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது கடந்த 1970 காலகட்டத்திற்குப் பிறகு மிக மோசமான தேக்க நிலையாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர். நான் பொறுப்பில்லாமல் மந்தம்என்னும் வார்த்தையைக் கூற விரும்பவில்லை.

ஆனால், நாட்டில் தீவிரமான மற்றும் நீண்ட காலத்துக்கான பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. கடந்த ஏப்ரல் மாதம் நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசு, 266 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. ஆனால், இவை மட்டும்போதாது.ராணுவம், சுகாதாரம், பொருளாதாரச் சவால்கள் ஆகியவற்றைச் சரிக்கட்ட ஜிடிபியில் இருந்து 10 சதவிகிதம் அவசியம் செலவுசெய்ய வேண்டும். ‘இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, 1. மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிசெய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதற்கு நேரடி பண உதவி (Direct cashassistance), 2. அரசின் ஆதரவுடன் கூடியகடனுதவித் திட்டங்கள் (government-backed credit guarantee programmes), மூலம் தொழில் துறைக்குபோதிய மூலதனம் கிடைக்கச் செய்தல் 3. நிறுவனத் தன்னாட்சி மற்றும் செயல் முறைகள் மூலம் நிதித்துறைக்கு தன் னாட்சி அதிகாரம் வழங்குதல் (Fix the Financial Sector) போன்றவற்றை மேற் கொள்ள வேண்டும்.   
இவற்றுக்கெல்லாம் பண உதவிக்கு எங்கே போவது என்றால், நிச்சயமாக கடன்வாங்கித்தான் செலவு செய்ய வேண்டும்.

நேரடி பண உதவிக்காக, இப்போது இருக்கும் சூழலில், அதிகம் கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. இதுஇந்தியாவின் கடன் ஜிடிபி விகிதத்தை அதிகரித்துவிடும் என்பதும் உண்மைதான். ஆனால், உயிர்களை, எல்லைகளைக் காப்பாற்ற முடியும், வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்கம் செய்ய முடியும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்றால், கடன் வாங்குவதில் தவறில்லை. கடன் வாங்குவது நமது பலவீனம் எனப் பொருள் கொள்வது தவறாகும். மாறாக, சில நாடுகளைப் போல, இந்தியா தன்னை ‘பாதுகாத்து’ கொள்ளும்(Protectionist) நிலையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்காக அதிகம் இறக்குமதி வரிகளை எல்லாம் விதித்துக்கொண்டு இருக்கிறது. அதுதான் தவறு.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.