tamilnadu

img

பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடு இல்லையாம்... அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகிறார்

புதுக்கோட்டை:
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் தமிழகத்தில் மேலும் எட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்  விரைவில் தொடங்கப்பட உள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள். ஆறு தனியார் மருத்துவமனைகள் என 17 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட எட்டு  மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா  பரிசோதனை ஆய்வகங்கள் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கான கருவிகள் வந்துவிட்டன, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின் ஆய்வகங்கள் செயல்பாட்டிற்கு வரும்.

தமிழகத்தில் தற்போதைக்கு மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடு இல்லை. தனியார் மருத்துவமனைகளில் உரிய ஆய்வுக்கு பின்னரே கொரோனா சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சமூக தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய இரண்டாம் நிலை பாதிப்பிலிருந்து மூன்றாம் நிலை பாதிப்பிற்கு மாறிவிடாமல் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பின் 144 தடை உத்தரவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு   அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.