tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.7500 வழங்கிடுக.... விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை....

புதுக்கோட்டை:
கொரோனா நோய் பரவல் காரணமாக வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும்என்று அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர்கள் எம்.சின்னதுரை, ஏ.பழநிசாமி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த கையோடு பல்வேறு கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைஉறுதித் திட்டப் பணிகள் நிறுத்தப் பட்டுள்ளன. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளியூரில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். அனைவரும் வேலையின்றி பட்டினியால் அவதிப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்டப்பூர்வகூலியான ரூ.273-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். மேலும், 100 நாள்வேலையை 200 நாளாகவும் தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். 

நோய் பரவல் தீவிரம் காரணமாக வேலையும் வருவாயும் இழந்து தவிக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணமும், ரேசன் விநியோகம் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய்,கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொரோனா காலம் முழுமைக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும். கோடை வெயில் கடுமையாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக நீண்டதூரம் மக்கள் அலைய வேண்டியுள்ள தால் போர்க்கால நடவடிக்கை எடுத்து  குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். டிஏபி காம்ப்ளக்ஸ் பொட்டாஷ், கலப்பு உரம் உள்ளிட்டஉரங்களின் விலையை 60 சதவிகிதத்திற்கு மேல் மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பது,  விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு விவசாய உற்பத்தி முறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையாகும். இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவது எனவும் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. 

ஆர்.சந்திரமோகனுக்கு புகழஞ்சலி
கூட்டத்தில் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.சந்திரமோகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.