பொன்னமராவதி, பிப்.19- தனியார் நிதி நிறுவனம் போலி ஆவணங்களின் மூலம் கடன் கொடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியைச் சேர்ந்த சிபிஎம் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ராஜா, தொண்டீஸ்வரி ஆகியோர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் இயங்கி வரும் ‘கிராமின் கூட்டா’ என்கிற நிதி நிறுவனத்தில் இருந்து நாங்கள் கடன் பெற்றதாகவும் அதை திரும்ப செலுத்த வேண்டும் என தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து எந்தவிதமான கடனும் பெறாத நிலையில் இவ்வாறு தகவல் வந்ததும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் விசாரித்தோம். எங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து போலியான ஆவணங்களை உருவாக்கி அதில் அவர்களே கையொப்பமிட்டு கடன் தொகை பெற்றுள்ளனர். எனவே எங்களது பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட மேலைச்சிவபுரி பெரியசாமி மனைவி மகேஸ்வரி, லதா இவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராமின் கூட்டா நிதி நிறுவன ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எங்களைப் போல் வேறு நபர்களின் பெயர்களிலும் மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதையும் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகிறார். மேலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தெரிவித்துள்ளார்.