tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காக பல குளறுபடிகளை எடப்பாடி அரசு செய்து வருகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை, டிச.1- உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காக பல குளறுபடிகளை எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது என்றார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலின். புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில்  கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய் சொல்லி வெற்றி பெற்றது என்று தொடர்ந்து பேசி வருகிறார்.  இது மக்களை கொச்சைப்படுத்தும் செயல். தேனியில் அதிமுக வெற்றி பெற்ற போதும், இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போதும் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றார்களா என்று நாங்கள் கேட்க வெகுநேரம் ஆகாது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தி வந்துள்ளது. அதிமுக கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் முறையான இடஒதுக்கீடு நடக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திமுகவின் கோரிக்கை நியாயமானது. அதனால் நீங்கள் சரி செய்து விட்டு தேர்தலை நடத்துகள் என்று நீதிமன்றம் தான் சொன்னதே தவிர நாங்கள் ஏதும் சொல்லவில்லை. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதன் விசாரணை வரும் 13-ம் தேதி வருகிறது.  தற்போது முதல்வர் பல மாவட்டங்களை பிரித்து விழா நடத்தி வருகிறார். மாவட்டத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மக்கள் வளர்ச்சி அடைவார்கள் என்றால் நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் இப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு முறையாக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இது குறித்து எந்த பதிலும் கிடையாது. தமிழகத்தில் சர்க்கரை ரேசன் அட்டைகள் அரசி ரேசன் அட்டைகள் மாற்றப்படுகிறது. இதுவும் முறையாக நடக்கவில்லை.  தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ஜனவரி மாதம் தான் அறிவிப்பார்கள். தற்போது டிசம்பர் மாதத்திலேயே அறிவித்து விட்டனர்.  இதன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு வரவேற்க பெரியண்ணன் அரசு எம்எல்ஏ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் அசு கொறாடா பெரியண்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ., வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், எம்எல்ஏக்கள் ஏ.வா. வேலு, சிவ.வீ.மெய்யநான், மா.சுப்பிரமணியன், பழனிவேலு தியாகராஜன், பெரிய கருப்பன், துரை சந்திரசேகன், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் உள்ளிட்டோர் பேசினர்.