districts

img

அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தர வேண்டும் 'உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, பிப். 28 - அனைத்து தேசிய இனங்க ளுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ வெளியீட்டு விழா திங்களன்று (பிப். 28) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அது வருமாறு:  உங்களில் ஒருவனான எனது முதல் 23வயது அனுபவங்களில் சிலவற்றை அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக எழுதி வைத்திருந்தேன். அந்தப் பதிவுகளின் தொகுப்பாக இந்த புத்தகம் வந்துள்ளது. பொது வாழ்வைப் பூங்காவாக எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகிய நால்வரும் என்னை செதுக்கிய சிற்பிகள். இந்த நான்குபேரும் தத்துவத்தில் அடை யாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே இருக்க விரும்புகிறேன். எனது தத்துவம் ‘திராவிட மாடல்' என்ற ‘திராவிடவியல் ஆட்சி முறை' கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறி முறை. கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக மேம்பாட்டில் இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூ கங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்' கிடைக்க வேண்டும். அனைத்து தேசிய இனங்க ளுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதே திராவிடவியல் கோட்பாடு. மாநிலங்களின் கூட்டமைப்புதான் ஒன்றியம் என்று அகில இந்தியத் தலைவர்கள் உணரத் தொடங்கி உள்ளனர். கூட்டாட்சித் தத்து வத்தின் நெறிமுறைகள் குறித்து ராகுல்காந்தி அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு பாராட்டு கள். மாநிலங்களுக்கு அதிக அதி காரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சிகளும் - அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள், சிந்தனை உரிமைகள், செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதி காரமற்ற பகுதிகளாக உருக்கு லைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும். மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக, அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவிலான சமூக நீதிக் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். இத்தகைய திராவிட வியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.