புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்மாவட்டச் செயலாளரும், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரு மான தோழர் ப.சண்முகம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தோழர் ப.சண்முகத்தின் உருவப்படத்தைத் திறந்து வைத்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை புகழுரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, நான் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேரும்போது தோழர் ப.சண்முகம் மாவட்டச் செயலாளராக செயல்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட கட்சிக்கும், தொழிற்சங்கத்திற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அடித்தட்டு தொழிலாளி வர்க்கமான உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பணி ஆற்றினார். அவர் உயர்த்திப்பிடித்த கொள்கை, லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலியாக இருக்கும் என்றார்.நிகழ்ச்சியில் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாநில பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்தும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
எம்.சின்னத்துரை எம்எல்ஏவுக்கு பாராட்டு
நிகழ்சியில் கந்தர்வகோட்டை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகமுற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.சின்னத்துரையைப் பாராட்டி சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.