புதுக்கோட்டை:
எய்டு இந்தியா நிறுவனமும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையும் இணைந்து நிறுவியுள்ள கோவிட் கவனிப்பு மையத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
எய்டு இந்திய நிறுவனமும், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையும் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த கோவிட் கவனிப்பு மையத்திற்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டி, ஆக்சிஜன் கிளினர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை ரூபாய் 6 லட்சம் மதிப்பில் இந்தக் கோவிட் கவனிப்பு மையத்திற்கு எய்டு இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்து வருவது, புயல் மற்றும் கோவிட் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருவது என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்டு இந்தியா நிறுவனம் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு இத்தகைய பேருதவியைச் செய்துள்ளது. மேலும், இம்மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும், கறம்பக்குடி, கீரனூர் அரசு மருத்துவமனைகளுக்கும் உதவ உள்ளதாகவும் தெரிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
கந்தர்வகேர்டை அரசு மருத்துவமனை போதுமான இடவசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு இடையில் இயங்கி வருகிறது. இதை சரிசெய்வதோடு, கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். கந்தர்வகோட்டைக்கு சீமான் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை வந்தபிறகு கந்தவர்கோட்டையை சுற்றியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய பயனை அளிக்கும். சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்தகைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் எய்டு இந்தியா நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மருத்துவத்துறை இணை இயக்குநர் கே.ராமு, துணை இயக்குனர் கலைவாணி, கவிஞர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் ராதிகா, எய்டு இந்திய நிறுவன ஊழியர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர் ஹரிகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.