tamilnadu

img

தற்காலிக சீரமைப்புப் பணியால் ரூ.25 கோடி வீண் கொள்ளிடம் ஆற்றங்கரை மீண்டும் உடையும் அபாயம்

சீர்கழி, மே 24- கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்யும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் 150 மீ தூர கான்கிரீட் சுவர் திடீரென உடைப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் தண்ணீர் புக ஆரம்பித்தது. இதைதொடர்ந்து கருங்கற்கள் பனை மரங்களை கொண்டு அதிகாரிகள் தற்காலிகமாக அடைத்தனர்.  அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகமானதால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டது.

அதனை மீண்டும் பொது துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கரையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் கரை பலப்படுத்தும் பணி நிறைவு பெறவில்லை. அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்பொழுது உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே ரூ 6 கோடி மதிப்பில் லாரிகளில் கருங்கல் கொண்டு வந்து அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 150 மீ தூரத்திற்கு இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் உடைந்து தகர்ந்த நிலையில் அதனை நிரந்தரமாக கட்டுவதற்கு இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து தற்காலிக பணியே நடைபெற்று வருகிறது.  இதுவரையில் ரூ. 25 கோடிக்கு மேல் வீணாக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் முழுமையாக அடைக்கும் பணி நிறைவு பெறவில்லை. நிரந்தரமாக ஆற்றின் கரையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் வரும் மழைக் காலத்தில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தற்காலிக பணிக்காக அதிக அளவில் தொகையை. செலவிடுவதற்கு பதிலாக நிரந்தரமாக 150 மீட்டர் தூரத்திற்கு அளக்குடி கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.