tamilnadu

பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த எதிர்ப்பு புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்து முறையிட தொழிற்சங்கங்கள் முடிவு

புதுச்சேரி, மே.17 - வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய புதுச்சேரி அரசுக்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் சனிக்கிழமை (மே 16) புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். சிஐடியு செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ், ஏஐடியூசி நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், ஐஎன்டியூசி  நிர்வாகி ஞானசேகரன், எல்பிஎப் நிர்வாகி அண்ணா அடைக்கலம் உள்ளிட்டு மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசு தொழிற்சாலைகளில் சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணியற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி இருப்பதற்கு கூட்டத்தில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி மண்ணில் உயிர் தியாகத்தின் மூலம் போராடிப் பெற்ற உரிமையை பறிப்பது அநீதியாகும். இந்நடவடிக்கை பெருமளவு வேலை இன்மையை அதிகரிக்கும். புதுச்சேரியின் சமூக பொருளாதாரம் பாதிப்படையும். எனவே, முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட பணிநேர அதிகரிப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்களன்று (மே 18) முதலமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மே-22 இயக்கம்
மத்திய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களில் கொடூரமான மாற்றங்களை கொண்டு வருகின்ற நடவடிக்கைகளை எதிர்த்து மே-22 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு தினத்தை கடைபிடிக்க அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. அதன்படி, அன்றைய தினம், 8 மணி நேர உரிமை, தொழிற்சங்க உரிமை, சம வேலைக்கு-சம உரிமை ஆகியவற்றிற்காக உயிர் தியாகம் செய்த “ஜூலை 30 தியாகிகள் சதுக்கத்தில்” தனிநபர் இடைவெளியுடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.