tamilnadu

img

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் வெளியிட, செயற்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் விளக்கிப் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இரண்டு பகுதிகள் உள்ளது. முதல் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டு கால பா.ஜ.க-என். ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளையும் செயல்படுத்திய திட்டங்களையும் விமர்சனம் செய்திருக்கிறது பா.ஜ.க.-என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்படுவதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் இரண்டாவது பகுதியில் உள்ள முக்கிய அம்சங்கள்.
    • முதன்மை ஆதாரத் துறையான விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி, மீன்பிடி மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு முன்னுரிமை அளிப்பது.
    • விவசாயம் சார்ந்த  பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான பருத்தி, கரும்பு உற்பத்தி மற்றும் உணவுப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான நெல் மற்றும் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பது.
    • மது வணிகத்தை கட்டுப்படுத்துவது, புதிய மதுபான தொழிற்சாலைகள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட ரெஸ்ட்டோபார் (Bar), பப்புக்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது.
    • வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைக் கண்காணிப்பது விசாரணை நடவடிக்கைக்கு கட்படுத்துவது.
    • அந்நிய மதுபான உற்பத்தியை அரசுப் பொறுப்பில் நேரடியாக மொத்த கொள்முதல் (FL1) செய்து, சில்லரை வணிகத்திற்கு (FL2) வழங்குவதன் மூலம் வருவாய் பெருக்குவது.
    • மாநிலத்தின் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சுற்றுலா வளர்ச்சி கொள்கையை உருவாக்குவது.
    • புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட ஒன்றிய அரசை வெகு மக்கள் போராட்டத்தின் வழியாக நிர்பந்திப்பது.
    • 12-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசின் கடன் வழங்கும் முறை கைவிடப்பட்டு, பொதுக்கணக்கு துவங்கி வெளிச்சந்தையில் கடன் பெறும் முறை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மீது திணிக்கப்பட்டன. 17.12.2007-ல் புதுச்சேரி பொதுக்கணக்கு தொடங்கிய போது நிலுவையில் இருந்த மாநிலக் கடன் ரூ. 2177 கோடியை ரத்து செய்திட வலியுறுத்துவது.
    • அனைவருக்கும் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவது அரசின் கடமையாக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும்.
    • புதுச்சேரியில் ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ள டிஜிட்டல் காயின் கைவிட வலியுறுத்துவது.
    • குடிமனைக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் வருவாய் துறை மூலம் கையகப்படுத்திய நிலங்களை தகுதியான மக்களுக்கு வீட்டுமனை வழங்கிடவும், 80:20 என்ற விகிதத்தில் மனைகள் ஒதுக்கவும் வலியுறுத்தப்படும்.
    • சொந்த வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்கும் வரையிலான இடைக்காலத்தில், மாத வாடகை மானியம் ரூ.4,000 வரை வழங்கிட வலியுறுத்தப்படும்.
    • சுதேசி, ரோடியார், பாரதி பஞ்சு ஆலைகளின் இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் பூங்காக்கள் அமைத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தப்படும்.
    • தகவல் தொழில்நுட்ப (IT) பூங்கா திட்டத்தைச் செயல்படுத்திட நடவடிக்கை எடுப்பது.
    • சேதராப்பட்டு, கரசூர், காரைக்கால் பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்கிட மாநிலக் கொள்கையை உருவாக்குவது.
    • கடல் சார்ந்த சுற்றுலாத் திட்டங்களில் மீனவர் சமூக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது.
    • கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) சீர்குலத்திடும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தினை ரத்து செய்து ஒன்றிய அரசின் முழு பங்களிப்புடன் 100 நாள் வேலை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • படித்து முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 10000 வழங்க வலியுறுத்துவது.
    • அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்திட நலவாழ்வு உரிமை சட்டம் அமல்படுத்தவேண்டும்.
    • சுத்தமான குடிநீர் வழங்கலை அரசுப் பொறுப்பில் ஏற்று, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கச் செய்திட.
    • புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தில் (CZMP) மீனவர் சங்கங்களின் பங்களிப்புடன்,
      அறிவியல் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்திட.
    • புதுச்சேரி மாநிலத்திற்கெனத் தனியாக பள்ளிக் கல்வி வாரியம் அமைத்திட.
    • அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தாய்மொழி வழிக் கல்வி அளிப்பதை உறுதிப்படுத்திட.
    • ஆட்சி மொழி, பயிற்று மொழி மற்றும் நீதிமன்ற மொழியாக தமிழை முழுமையாகச் செயல்படுத்தவும், இரு மொழிக் கொள்கை தொடரவும் வலியுறுத்தப்படும்.
    • புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு (கல்வி வாய்ப்பு) கிடைத்திட.
    • புதுச்சேரி மாநிலத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி
      உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திட.
    • தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு எதிராக சேலியமேடு மற்றும் மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியை (Toll Plaza) அகற்றிட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும்.
    • அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அனைத்து நிர்வாக
      அமைப்புகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திட.
    • நுண் நிதி நிறுவனங்களின் அநியாய வட்டி மற்றும் மோசமான வசூல் முறையில் கடனை வசூலிப்பது ஆகியவற்றை உறுதியாக தடுத்திட நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவர
    • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடும், சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு
      வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.
    • மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், முதியோர்கள் ஆகிய நமது உறவுகளின் பாதுகாப்பிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.
    • திருநர்களுக்கு எதிரான திருநர் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2026-ஐ திரும்பப் பெற்றிட வலியுறுத்துவது.
    • மக்கள் தொகைக்கு ஏற்ப திருநர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட.
    • சைகை மொழிக் கல்வி, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி (Braille) கல்விப் பயிற்சியை
      ஊக்கப்படுத்திட.
    • முதியோர்களுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவியை உறுதிப்படுத்திட.
    • வெறுப்புப் பேச்சாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தொகுதி வாரியாக 'அமைதித் தூதுவர்' குழுக்கள்
      அமைத்துப் புதுச்சேரியை மதவாதமற்ற அமைதிப் பூங்காவாகக் பாதுகாத்திட!
    • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கிட.
    • அனைத்து அட்டவனை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கல்வி உதவித் தொகைவழங்குவதை உறுதிசெய்திட மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.