புதுச்சேரி:
புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து, 17 வயது மாணவி கொல்லப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு மாணவியின் தாயை மிரட்டிய விவகாரம்புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.புதுச்சேரி, குருமாம்பேட் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தந்தை இறந்துவிட்டதால், தனது தாயுடன் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, பலமுறை அவரை மிரட்டி பாலியல் சித்ரவதை செய்து வந்துள்ளார்.இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்ட மாணவி கேரளாவில் உள்ள சித்திவீட்டிக்கு சென்றுள்ளார். அங்கு உடல் நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி பாலியல் சித்ரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது நடந்ததை சம்பவத்தை கூறி அழுது உள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி, மாணவி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக மாணவியின் சித்தி உடனடியாக திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும், குற்றவாளிக்கு ஆதரவாக தற்போது பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் செயல்பட்டு வருவதாக மாணவியின் தாய் பரமேஸ்வரி ஜனநாயக மாதர்சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பரமேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது மகள் உயிரிழப்புக்கு காரணமான அருண்குமாரை கேரளா நீதிமன்றம் கடுமையான தண்டனையை கொடுத்து தண்டிக்க வேண்டும்” என்றார்.
குற்றவாளி அருண்குமாருக்கு ஆதரவாக இருந்து வரும் பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் குற்றவாளியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரவுடிகளை வைத்து, என்னை மிரட்டுகிறார். எனது மகள் உயிர் இழப்புக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்பாஜக அமைச்சர் சாய் சரவண குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குற்றவாளி அருண் குமாருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.பாஜக அமைச்சரின் இத்தகைய போக்கை கண்டித்து மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.