tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சட்டமன்ற நிகழ்வுகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை  அகற்ற தொடர் வலியுறுத்தல்

தென் தமிழ்நாட்டின் நுழைவாயிலில் விதிமுறை களுக்கு மாறாக அமைந்துள்ள திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு மூன்று கடிதங்கள் அனுப்பி யுள்ளதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்து வோம் என்றும் உறுதியளித்தார்.

ஔவையார் குறித்த சுவாரஸ்யமான விவாதம்  

சட்டமன்றத்தில் ஔவையார் குறித்த அறிவுசார் விவாதம்  அரங்கேறியது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்தில் ரூ.13 கோடியில் ஔவை யாருக்கு மணிமண்டபம் கட்டப்படுவதாகவும், ஔவையார் அறிவு களஞ்சியம் துவக்க அரசு முன்வருமா என்றும் கேள்வி எழுப்பினார். நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், “ஔவையார் ஒருவர் அல்ல, ஐந்து பேர் என  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எந்த ஔவையாரைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்றார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இதுவரை ‘ஔவையார்’ என்று நினைத்திருந் தோம், இப்போது ஔவை ‘யார்?’ என்ற கேள்வி எழுந்து உள்ளது” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

“தெர்மாகோல் என்று ஓட்டுகிறீர்களே!”

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் விமான நிலை யங்கள் குறித்து உரையாடல் நடந்தது. அதிமுக முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஓராண்டில் இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டு கோவை விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. விமான நிலையம் அமைப் பது தண்ணீரில் தெர்மாகோல் விடுவது போல் எளிதல்ல” என்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு, “விமான நிலை யம் கட்டுவது ஜீபூம்பா வேலையா?” என வினவியதற்கு, செல்லூர் ராஜூ, “தெர்மாகோல் என்று கூறி ஓட்டுகிறீர்களே” என மறுத்தார்.

தமிழக ஆறுகளில்  தடுப்பணைகள் அமைக்க அறிவிப்பு

பெஞ்சால் புயலால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைத் தடுக்க தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் உறுதியளித்தார். துணைத் தலைவர் கு.பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சாத்தனூர் அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும் என்றார். அதேபோல், பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு பதிலளித்து, தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கோரிக்கை முன்னுரிமையுடன் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

கலைஞர் கனவு இல்லத்  திட்டத்தின் முன்னேற்றம்

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வரும் மே 31 -ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார். அதிமுக  உறுப்பினர் செல்லூர் ராஜூ, திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதியைவிட குறைவான நிதிதான் செலவிடப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். பதிலளித்த அமைச்சர், எட்டு ஆண்டு களில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், எந்த இடத்திலும்  பணி நிறுத்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப் பட்டதாகக் குறிப்பிட்டார்.

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான  திருத்திய விதிமுறைகள்

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான தடையில்லா  சான்றிதழ் வழங்கும் விதிமுறைகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாநில நெடுஞ்சாலைச் சந்திப்புகளில் இருந்து 200  மீட்டர் தூரத்திலும், மாவட்ட சாலைச் சந்திப்புகளில் இருந்து  100 மீட்டர் தூரத்திலும் பெட்ரோல் பங்க் அமைக்க அரசாணை  121-ன் படி அனுமதி வழங்கப்படும் என்றார்.