புவனேஸ்வர், ஏப்.4- ஒடிசா மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதளம் தனியாக தேர்தலைச் சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை பிஜூ ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்ட பாஜக, இம்முறை தனித்து விடப்பட்டு இருக்கிறது. எனினும் பாஜகவினர் நம்பிக்கையுடன் வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால், நாளுக்கு நாள் பாஜகவுக்கு சோதனை அதிகரித்து வருகிறது. பாஜகவின் அனந்தபூர் தொகுதி வேட்பாளர் பாகிரதி சேதி என்பவர், திடீரென பாஜகவிலிருந்து விலகி, பிஜூ ஜனதாதளத்தில் ஐக்கியமானார். தற்போது, சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த துஷ்கர்காந்தி பெகரா என்பவரும் பாஜகவிலிருந்து விலகி, பிஜூ ஜனதாதளத்திற்கு ஓட் டம் பிடித்துள்ளார். 4 கட்டத் தேர்தல் முடிவதற்குள் யார் யாரெல்லாம் ஓடிப்போகப் போகிறார்களோ? என்று பாஜக தலைவர்கள் கலக் கத்தில் ஆழ்ந்துள்ளனர்.