tamilnadu

img

நான்காம் வகுப்பு படித்தபோது வீட்டில் செங்கொடி ஏற்றியவர்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தோழர்கள் பலரையும் இத்தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்போது நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் தோழர் பி.நடராஜன். குமரி மாவட்டம், அருமனை ஒன்றியம், மாஞ்ஞாலுமூடு கிராமத்தில் 1942ல் பிறந்தவர். இவருடைய தந்தை சிறிய அளவில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். தோழர் நடராஜன் எஸ்எஸ்எல்சி வரை படித்தார். நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் இயக்கத் தோழர்களும் இல்லற இணையருமான சதாசிவம் – சாரதா பேசுவதைக் கேட்டாராம். “அப்போது ஏற்பட்ட ஈர்ப்பால் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை எங்கள் வீட்டில் ஏற்றினேன். இந்த வயதிலேயே அரசியலா என தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் என் அண்ணன் (வட்ட வழங்கல் அலுவலராக இருந்தவர்) தலையிட்டு அதுதான் அவனுக்கு பிடித்திருக்கிறது என்றால் இருக்கட்டும் என்று தாயாரை சாந்தப்படுத்தினார்,” என்று அந்தச் சிறுவயது நாட்களுக்குச் சென்று திரும்பிவந்தார் நடராஜன்.

1956 வரையில் குமரி மாவட்டம் கேரளத்தின் ஒருபகுதியாக இருந்தது. அக்காலத்தில் தோழர்கள் இஎம்எஸ், ஏ.கே.கோபாலன் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்திற்கு அடிக்கடி வருவார்கள். குமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான ஜிஎஸ்.மணி, டி.மணி போன்ற தோழர்களின் தீரச்செயல்கள் இளைஞர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இத்தகைய பின்னணியில் தோழர் நடராஜனுக்கும் கம்யூனிஸ்ட்கட்சியின் மீது மிகுந்த ஆர்வமும், மரியாதையும் ஏற்பட்டது.  குலசேகரம் பகுதியில் கட்சிப்பணி, தொழிற்சங்கப்பணி ஆற்றி வந்த  தோழர் கிருஷ்ணன் (மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவனின் தந்தை)  மூலம் 1965ம் ஆண்டு தோழர் நடராஜன் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். அடுத்த 6 மாதத்தில் இவர் விளவங்கோடு பகுதிக்குழுவில் இணைக்கப்பட்டார். மக்கள் பிரச்சனைகளுக்காக அயராது போராடிய இவர், கட்சியின் மாவட்டக் குழுவிற்கும், மாவட்ட செயற்குழுவிற்கும் தேர்வுசெய்யப்பட்டார். 5 ஆண்டு காலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டவர், இப்போதும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக இயங்கி வருகிறார். விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் பல ஆண்டுகள் செயல்பட்டு இருக்கிறார். 

1960களில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தைப் போக்கி மக்களுக்கு உணவு கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நடராஜன், தோழர்கள் டி.மணி, தாலுகா செயலாளரான எம்.ஏ.சையது முகமது ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். 62 நாட்கள் சிறைவாசம் சென்றவர்.  மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசர நிலை ஆட்சிச் சட்டத்தை அமலாக்கிய போது தோழர் நடராஜன் உள்ளிட்டு பல தோழர்கள்  கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அருமனை ஒன்றியத்தில் வேகமாக வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், ஆர்எஸ்எஸ் அமைப்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கண்ணூரிலிருந்து ஒரு சிலர் இறக்குமதி செய்யப்பட்டனர். அவர்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்புடன் மத வெறியையும் பரப்பினர். ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு கொலைக் கருவிகளுடன் வன்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அவர்கள் கம்யூனிஸ்டுகளை குறிவைத்தார்கள். 

1986ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தோழர்கள் பாபு, செல்லையனைத் தாக்கிப் படுகொலை செய்தனர். தோழர் நடராஜனுக்கும் அச்சுறுத்தல் இருந்தது.  கட்சித் தோழர்கள் அவரை பாதுகாத்தனர். தோழர் ஜே.ஹேமச்சந்திரன் தனது வாகனத்தில் ஏற்றி பாபு, செல்லையன் ஆகியோரின் இறுதி நிகழ்ச்சிக்கு பி.நடராஜனை அழைத்து வந்தார். பாபு, செல்லையனை பாதுகாக்க முயன்ற தோழர்கள் சோமன், கோபாலன், விஜயகுமார் ஆகியோரும் கத்திக்குத்துக்கு உள்ளாகினார். அருமனை, வெல்லாங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ-யின் கட்டுப்பாட்டில் இருந்த 131 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை அப்பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் (88 தலித் குடும்பங்கள், 15 தலித் அல்லாத குடும்பங்கள்) குத்தகை சாகுபடி செய்து வந்தனர். நிலத்தை விட்டு அவர்களை வெளியேற்றிட நிலச்சுவான்தார்கள் முயன்ற போது குத்தகை சாகுபடியைப் பாதுகாத்திட கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்கம் தலையிட்டு தொடர்ச்சியாக போராடியது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து குத்தகை விவசாயிகளுக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது. கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் தோழர் திவாகரன் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதிலிருந்து எல்லா வகையிலும் உதவியாக இருந்ததாக நடராஜன் குறிப்பிட்டார். இத்தகைய போராட்டத்தில் தோழர் நடராஜன் முக்கிய பங்காற்றினார். மேலும் செம்மங்கோடு சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருந்த 37 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்திய மக்களுக்கே பிரித்துக் கொடுத்திட நடைபெற்ற போராட்டத்திலும் நடராஜனுக்கு முக்கிய பங்குண்டு.

தொடர்ச்சியாக போராடியது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து குத்தகை விவசாயிகளுக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது. கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் தோழர் திவாகரன் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதிலிருந்து எல்லா வகையிலும் உதவியாக இருந்ததாக நடராஜன் குறிப்பிட்டார். இத்தகைய போராட்டத்தில் தோழர் நடராஜன் முக்கிய பங்காற்றினார். மேலும் செம்மங்கோடு சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருந்த 37 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்திய மக்களுக்கே பிரித்துக் கொடுத்திட நடைபெற்ற போராட்டத்திலும் நடராஜனுக்கு முக்கிய பங்குண்டு.

1986இல் ஊராட்சி ஒன்றிய தலைவரை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையில் தமிழகத்திலேயே மிக அதிகமாக 48 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து விருது பெற்றவர். தக்கலை நிலவள வங்கியின் துணைத் தலைவர், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர், தொடர்ந்து 6ஆவது முறையாக இப்போதும் அருமனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பாராட்டக் கூடிய தலைவராக தோழர்.பி.நடராஜன் உள்ளார். தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை குறிப்பிட்டபோது “கம்யூனிஸ்ட் கட்சிதான் அந்த வாய்ப்புகளை எனக்கு வழங்கியது,” என்கிறார். இன்று தனது 78 வயதிலும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பதை பெருமையாக கருதுவதாக நெகிழ்வோடு குறிப்பிட்டார். தோழர்.பி.நடராஜனுக்கு 6 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உள்ளனர். சகோதரர்களில் இருவர் வழக்கறிஞர்கள், மற்றவர்கள் அரசு ஊழியர்கள்.  இவர்கள் நடராஜனுடைய பொது வாழ்க்கைக்கு பெரிதும் துணையாக இருக்கிறார்கள். மனைவி யசோதா மற்றும் இரண்டு மகன்கள் உடன் இருக்கிறார்கள்.  இளைய மகன் கட்சி உறுப்பினர். மனைவியும், இரண்டு மகன்களும் தனது இயக்கப் பணிகளுக்கு துணையாக நிற்கின்றனர் என்று கூறுகிறார் நடராஜன்.   தற்போது உடல்நலம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றாலும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், கூட்டுறவு சங்க நிர்வாகியாகவும் அயராது செயல்பட்டுவரும் தோழர் நடராஜனின் ஈடுபாடு மிக்க இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.