tamilnadu

img

மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை

சென்னை,பிப்.29- 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என அரசு தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வறையில் தேர்வு தொடர்பான புத்தகம், துண்டு சீட்டுகள் வைத்திருந்து தானாக முன்வந்து ஒப்புக் கொண்டால், தலைமை கண்காணிப்பாளர் எச்சரித்து விளக்கம் எழுதி வாங்குவார் என்றும், மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ, வெளியில் இருந்து உதவி பெற்றாலோ தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்வதுடன், வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு அதிகாரிகள்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட 31 அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். 12ஆம் வகுப்புக்கு மார்ச் 2 ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 4 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 27 ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளாக பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த பல்வேறு இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.