tamilnadu

img

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் வருமானவரி சோதனை

சென்னை,ஜன.21- தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்விக் குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை முகப்பேர், திருவள்ளூர் சூரப்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் காலை 10.30 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.