tamilnadu

img

விழிபிதுங்கி நிற்கும் ஊராட்சித் தலைவர்கள் - சி.ஸ்ரீராமுலு

“பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற் படுத்தியிருந்தாலே நிதியை ஒதுக்க வேண்டும். வடகிழக்கு போன்ற சில மாநிலங் கள் அத்தகைய அமைப்புகளை ஏற்படுத்த வில்லை. தமிழகம் போன்ற மாநிலங்கள் ஏற்படுத்தி விட்டதால் எந்த தடையும் இல்லை. இருந்தாலும், தேர்தலை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் விதி காரணமாகவே நிதிகள் தாமதப்படுகிறது. தேர்தலுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு மானியம் அளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.2017-18 ஆம்  நிதியாண்டுக்கான செயலாக்க மானியங்கள் உள்பட நிதிகளை எந்த மாநில அரசுக்கும் மத்திய அரசு வழங்க வில்லை”-அரசு கூடுதல் தலைமைச் செயலா ளர் எஸ். கிருஷ்ணன்

கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்னதாகவே உள்ளாட் சித் தேர்தலை நடத்தி முடித்து இருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் மத்திய அரசு தர வேண்டிய, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற முடியாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஊராட்சிகள், நிதி யின்றி தள்ளாடின. கிராம பஞ்சாயத்துகள் முற்றிலும் முடங்கின. ஊராட்சி நிர்வாகம் அடிப்படை பணிகளை செய்து தர முடியாமல் ஸ்தம்பித்துப் போனது. ஒரு வழியாக  கடந்த ஆண்டின் இறுதி யில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.  ஏலம், பணம், சாதி,  மதம், இனம், ஆளுங்கட்சி என பல சவால் களையும் தாண்டி சாதாரணப் பின்னணி யிலிருந்தும் பலர் வெற்றி பெற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியை முடிந்ததும் சிலர் தங்கள் பணிகளை வேகவேகமாக துவக்கினர். ‘மரண பள்ளங்களாக’ காட்சி அளிக்கும் சாலைகளை சீரமைக்கும் பணியில் முனைப்புக் காட்டினர். குடிநீர் பிரச்சனையை சமாளிக்க மின் மோட்டார்கள் பழுது நீக்கம், பைப் லைன் சீரமைப்பு பணிகளிலும் கவனம் செலுத் தினர். எரியாத தெரு மின் விளக்குகள் மாற்றம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற் கொண்டனர். காசோலை மூலம் ஊராட்சி யின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இருந்ததால் கையிலிருந்த பணத் தோடு அங்கும் இங்குமாக கடனை வாங்கி செலவு செய்தனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு அவர்களைஅலற வைத்தது.

தமிழகத்தில்,  ஊராட்சி மன்றத் தலைவர்க ளின் ‘செக்’ பவரை பறித்து ‘செக்’ வைத்தது எடப்பாடி அரசு. காசோலை முறையை ஒழித்து அனைத்து பண பரிவர்த்தனைகளும் ‘ஆன்லைன்’ வழியே நடக்கும். பொது நிதி மேலாண்மை எனும், ‘ஆன்லைன்’ வழி பரிவர்த்தனையை கொண்டு வந்துள்ளனர். இதற்கு சொல்லப்பட்ட காரணம், ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதை தடுக்க என்பதாகும்.

உள்ளதும் போச்சுடா...

ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி யேற்று ஒரு மாதம் கடந்தது தான் மிச்சம். ஆண்டுக் கணக்காக கொடுமையை அனுப வித்து வரும் கிராம மக்களோ ‘எங்க தெருவுல தண்ணி வரல, அந்தத் தெருவுல பைப் உடைஞ்சு போச்சு, எங்கியுமே லைட் எரியல, ஒரு வாரமா குப்பையே எடுக்க வரல... இப்படி யாக புகாரை அடுக்கிக் கொண்டே ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பி னர்கள் வீட்டுக்கு முன்பு நின்று குமுற தொடங்கிவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று புரியா மல் விழிபிதுங்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்க ளது சொந்த பணத்த செலவு செய்தாலும் அதை எப்படி திரும்ப எடுப்பது என்பது குறித்த எந்த வழிகாட்டுதலும் ஆன்லைன் மூலம் திட்டப் பணிகளுக்கான தொகையை பெறு வது குறித்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால் திணறிப் போய் உள்ளனர்.

தில்லாலங்கடி...

ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துள்ளதால் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி 14ஆவது நிதிக்குழு பரிந்துரைப் படி 13,000 கோடி ரூபாய் மிக விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ் நிலையில், ஆளும் அதிமுகவுக்கு போதிய பலம் இல்லை என்பதால் பழிவாங்கும் போக் காக கிராம பஞ்சாயத்தின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றி சாகடிக்க முடிவு செய்துள் ளது. அதன் முதல்படிதான் ஊராட்சி மன்றத் தலைவர்களின் ‘செக்’ பவரை முடக்கி அதி காரத்தை மீண்டும் அதிகாரிகளிடம் கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளின் சுய செயல்பாட்டை முடமாக்கி இருக்கிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை யால், ஊராட்சிமன்ற பணம் வீண் விரயமா வதுடன் கடந்த காலங்களில் எழுதப்படாத சட்டமாக இருந்துவந்த 10 விழுக்காடு அதி காரிகளின் ‘கமிஷன்’ இனி 20 முதல் 25 வரை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. தலைவர்களிடம் ‘செக் பவர்’ இருப்ப தால் மத்திய அரசு வழங்கும் நிதியில் பெரும்  பகுதியை மக்களின் அடிப்படைத் தேவை களுக்காக அவ்வப்போது எடுத்துக் கொள் வார்கள். ஆனால், அந்த செக் பவரை பறித்து சாலைப் பணியில் பெரும் தொகையை செலவிட்டு அதிகாரிகள் மூலம்  கமிஷன் தொகையை கீழிருந்து மேல்மட்டம் வரைக்கும் பஞ்சாயத்து தலைவர்களின் தலையீடு இல்லாமல் முழுமையாக பங்கு போட்டுக் கொள்ளவே ஆளுங்கட்சி இத்தகைய தில்லாலங்கடி ஏற்பாட்டை செய்திருப்பதாக ஊராட்சிமன்றத் தலைவர்கள், சமூக ஆர்வ லர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அதிகாரிகள் என பலரும் கூறுகின்றனர்.

அலங்காரப் பதவி...

மக்களால் தேர்வு செய்யப்படும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ஆயிரம் ரூபாயும், மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அமர்வுப்படியாக 200 ரூபாயும் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,400 மட்டுமே வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒரு கூட்டத்துக்கு அமர்வு படி யாக ரூ.50 என்று மாதந்தோறும் அதிகபட்சம் ரூ.100 பெறலாம். இது அலங்காரப் பதவி யாக மட்டும் உள்ளதால் அதிகாரப்பரவல் வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது.