புதுதில்லி:
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தமானது? என்ற வழக்கில், ‘ராமரின் வம்சாவளி யார்?’ என்று போட்டி ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாஜக பெண் எம்.பி.யுமான தியாகுமாரி, தன்னை “ராமரின் வம்சாவளி”என்று கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.“இராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்க பரந்துஇருக்கிறார்கள். என் குடும்பம், ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது. இதற்கான கையெழுத்துப் பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் இருக் கின்றன” என்றார் அவர்.
இந்நிலையில், மேவார் - உதய்ப்பூர்அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரும், ராமருக்கான வாரிசுப் போட்டியில் இறங்கியுள்ளார். தன்னை ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அவரும் கூறியுள்ளார்.“இராமரின் வாரிசுகள் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்பி இருப்பதை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். இவ்விஷயத்தில் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால், நீதிமன்றம் எங்களை நாடலாம். ஏனெனில்,நான் தான் கடவுள் ராமரின் 232-ஆவதுவாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது” என்று மகேந்திர சிங் கூறியுள்ளார்.“ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இப்போது அயோத்தியில் வசிக்கிறார்களா?” என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன் றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்தே, ராமரின் வாரிசுக்கு அடிபிடி ஆரம்பித்துள்ளது.