புதுதில்லி:
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப்பணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக அவ்வப்போது வெளியாகும் தகவல் இந்திய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தவறுவதில்லை. இவ்வாறான கறுப்புப் பண பதுக்கல், 2016-ஆம் ஆண்டில் 45 சதவிகிதம் குறைந்திருந்த நிலையில், 2017-இல்7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்ததாகவும் அண்மையில் தகவல் வெளியானது.இந்நிலையில், தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களில் முதற்கட்டமாக 3 லட்சத்து 10 ஆயிரம் பேர்களின் விவரங்களை முதல்முறையாக சுவிஸ் வங்கி, மத்திய அரசிடம் அளித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டின் பெடரல் வரி நிர்வாகத்தில் இடம்பெறும் 75 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் (Exchange Of Information) ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. இதன்படியே சுவிஸ் வங்கி இந்தியாவிடம் விவரங்கள் பரிமாறிக் கொண்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி 75 நாடுகளுக்கும் இதுபோன்ற விவரங்கள் பரிமாறப்பட்டுள்ளன என சுவிஸ் பெடரல்வரி நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.தற்போது செயல்பட்டுவரும் கணக்குகள் மட்டுமில்லாமல் 2018-ம்ஆண்டு வரை மூடப்பட்ட கணக்குகள்குறித்த விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.ஆனால், சுவிஸ் வங்கி அளித்துள்ள 3 லட்சத்து 10 ஆயிரம் வங்கிக் கணக்குகளுக்கு சொந்தமானவர்களின் பெயர்களை மத்திய அரசு இதுவரை வெளிப் படையாக அறிவிக்கவில்லை. எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலையும் வெளியிடவில்லை.