புதுதில்லி:
தில்லியில் சங்-பரிவாரங்கள் நடத்திய வன் முறையில், அப்பாவி இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, காவல்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பத்திரிகையாளர்கள் என ஒருவரும் தப்பவில்லை.இந்நிலையில், சி.என்.என். நியூஸ்18 செய்தியாளர் ருன்ஜ்ஹன் சர்மா அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:“சினிமா பார்த்தேன் என்று நான் நினைத்தேன்.ஏனெனில், அந்தக் காட்சிகள் அச்ச மூட்டுவதாகவும்,நடுங்க வைப்பதாகவும் இருந்தது. தில்லியின் வடகிழக்குப் பகுதியான காசூரி காஸ் பகுதியில் வாள்கள்,இரும்புக் கம்பிகள், ஹாக்கி மட்டைகளுடன் ஒருகும்பல் வந்தது. அதில் பலர் ஹெல்மெட் அணிந்திருந்தனர். எல்லோரும் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.
நாங்கள் புகைப்படும் எடுக்க முயன்றபோது, பாக்கெட்டுகளிலிருந்து உங்களுடைய மொபைல் போனை எடுக்காதீர்கள். என்ன நடக்கிறது என்றுபார்த்து ரசியுங்கள் என்று அந்தக் கும்பல் எங்களை மிரட்டியது. எங்களைச் சுற்றி கற்கள் வீசப்பட்டன. தெருக்களில் ஆசிட் ஊற்றப்பட்டது. மதத் தலங்கள்தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வீடுகள் தாக்கப்படுவதை வேதனையுடன் வேடிக்கைப் பார்க்கவேண்டியது இருந்தது. மௌஜ்புர் பகுதிகளுக்கு அருகில் நாங்கள்சென்றபோது, அங்கே மற்றொரு மதத்தலம் நொறுக்கப்பட்டது. அங்கே, 300-க்கும் மேற்பட்டவர்கள் மதத்தலத்தை அடித்து நொறுக்கினார்கள். அங்கே தீ பற்றி எரிந்தது. நான் அங்கிருந்து என்.டி.டிவி நிருபர்களான சவுரப் சுக்லா, அரவிந்த்குணசேகர் ஆகியோருடன் இணைந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அப்போது, திருநீறு அணிந்த காவலர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தவர்களை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் பார்த்தோம். அந்தக் காட்சிகளை என்னுடன் இருந்த அரவிந்த் குணசேகர் வீடியோ எடுத்தார். சில நிமிடங்களில் துப்பாக்கி, இரும்புக் கம்பிகள், ஹாக்கி மட்டைகள் வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் எங்களைச்சுற்றிவளைத்தனர்.
இதையெல்லாம் நாங்கள் கவனிப்பதற்கு முன்னர் அரவிந்த்தை அவர்கள் தாக்கினார்கள். இன்னும் நிறையப் பேர் எங்களை நோக்கிவந்தனர். சவுரப் சுக்லாவும் நானும் கையெடுத்து கும்பிட்டு எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் செய்தியாளர்கள் என்று தொடர்ச்சியாக கூறினோம். ஆனால், அவர்கள் எங்களுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக சில நிமிடங்கள் அரவிந்த்தை தாக்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு போட்டோவையும் வீடியோவையும் எங்களுடைய போனிலிருந்து அழிக்கச் செய்தார்கள். அதற்கு பிறகுதான் எங்களைச் செல்ல அனுமதித்தார்கள். அரவிந்த்தின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. இரண்டு பற்கள் உடைந்து விழுந்தன.
அவர்கள், எங்களுடைய மத அடையாளம் குறித்து விசாரித்தார்கள். நான் என்னுடைய நிருபர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். அந்த அடையாள அட்டையில் என்னுடைய இறுதிப் பெயராக சர்மா என்று இருந்தது. சவுரவ் சுக்லா அவர் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையைக் காண்பித்தார். எங்களில் யாராவது ஒருவர் இஸ்லாமியரா? என்று அறிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். நீண்ட கெஞ்சலுக்குப் பிறகு எங்களுடைய மத அடையாளத்தை நிருபித்த பிறகுதான்அவர்கள் எங்களை செல்வதற்கு அனுமதித்தார்கள்.கை கூப்பி கும்பிட்டபடியே ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லச் சொன்னார்கள். இப்போது நினைத்தாலும் திகிலூட்டக் கூடியவையாக அவை இருக்கின்றன.இவ்வாறு ருன்ஜ்ஹன் சர்மா கூறியுள்ளார்.