தில்லியில் நடந்த வன்முறையை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் நடைபெற்றது.
மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய கலவரம் 26-ஆம் தேதி வரையில் இந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதில் இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பாஜக தலைவர்கள் பேசிய சர்ச்சைப் பேச்சுகள்தான் வன்முறைக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி வன்முறையை கண்டித்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த போராட்டத்தின்போது இந்தியத் தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, தில்லி போலீசார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியத் தூதரகத்தின் முன்பு மலர்கள் வைக்கப்பட்டன.
அதேபோல், அமெரிக்காவின் நியூயார்க், பால்டன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.