tamilnadu

img

விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்..நாசா அறிவிப்புக்கு இஸ்ரோ மறுப்பு

பெங்களுரூ:
நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர்  ஏற்கனவே கண்டுபிடித்து விட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.கடந்த செப்டம்பர் 7 அன்று விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. சந்திரயான்- 2 விண்கலம் மூலமாக செலுத்தப்பட்ட ஆர்பிட்டரில் உள்ள கேமிரா மூலம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டது. இதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைப்பும் ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயன்று வந்தது. 

இந்நிலையில் நாசா, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 இன் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியனுக்கு செவ்வாயன்று நன்றி தெரிவித்தது. “நாசாவின்பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்து விகரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக” சண்முக சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.ராஜஸ்தான் கிஷான்கர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. எங்களது இணையதளத்திலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் இஸ்ரோ இணையதளத்தில் சென்று தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.கடந்த செப்டம்பர் 10 அன்று இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில்,  விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் லேண்டருடன் இதுவரை எந்த தொடர்பும் இல்லை. லேண்டருடனான தொடர்பை மீண்டும் மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.