ஷாஜகான்பூர்:
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர்களில் சின்மயானந்தா முக்கியமானவர். சாமியாரான இவர், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில், சாமியார் சின்மயானந்தா, தனக்குச் சொந்தமான சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவியரை மிரட்டி பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக அண்மையில் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பகிரங்கமாகவே புகார் அளித்தார். மாணவியின் தந்தையும், தனது மகளுக்கு நீதிகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார். அதனடிப்படையில், சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரமும், குற்றம்சாட்டப்பட்ட சின்மயானந்தாவிடம் 7 மணிநேரமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆதாரங்களைத் திரட்டினர். சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி தரப்பில், சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும், சின்மயானந்தா மீது கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால், சம்பந்தப்பட்ட மாணவி அதிர்ச்சியடைந்தார். “மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.