டெட் தேர்வு எழுத பி.இ.படித்தவர்களுக்கு அனுமதி
சென்னை,டிச.13- பி.இ. படித்தவர்களும் டெட் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வேலையின்மைக்கு தீர்வாகாது என்றும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தை தாண்டியுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசிடம் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமும் இல்லை. தொழில் துவங்க வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களை அழைக்கும் எடப்பாடி அரசு உள்ளூரில் காணாமல் போன 5000 சிறு குறு தொழிலை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் கோவையில் துப்புரவுப்பணிக்கு எழுதப் படிக்க தெரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்று அறிவித்தவுடன் பி.இ படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தார்கள். இதிலிருந்தே வேலையின்மை கொடுமை எந்தளவிற்கு உச்சத்தில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இத்தகையச் சூழலில், தற்போது பி.இ, பி.எஸ்.சி. படித்து பி.எட் படித்தவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) எழுதலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 35 ஆயிரம் பேருக்கு இதுவரை வேலை வழங்கவில்லை என்பது மட்டுமல்ல. இன்னும் பி.எட்., படிப்பு படித்து தகுதி வாய்ந்த 1 லட்சம் பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேர் பொறியியல் படித்துவிட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இணைகின்றனர்.
படிப்பிற்கு ஏற்ற தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பை உருவாக்காமல் தமிழக அரசு இளைஞர்களின் வாழ்க்கையோடும் எதிர் காலத்தோடும் விளையாடி வருகிறது. தமிழக அரசுத் துறையில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை அரசுப் பணியில் உருவாக்க வாய்ப்பிருந்தும், அரசாணை 56-ஐ வெளியிட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது. எனவே அந்தந்த துறை சார்ந்த படிப்பிற்கு தகுதிவாய்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.இ, பி.எஸ்.சி., படித்தவர்கள் டெட் தேர்வு எழுதலாம் என்கிற அரசாணை, அரசின் இது போன்ற நடவடிக்கை தீர்வுகாண உதவாது என்பதையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முயலாமல் குறுக்கு வழியில் தீர்வுகாணும் முயற்சியும் பயனற்றதாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.