சென்னை:
இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரியசட்டம் இயற்றிட வேண்டும் என்று மத்திய அரசிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசுப்பணிகளில் வழங்கப்படும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூகநீதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
உத்தர்கண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இடஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தர்கண்ட் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், “வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. மாநில அரசு கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கடமையும் இல்லை. அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனி நபருக்கும் அடிப்படை உரிமை இல்லை. இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிடமுடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் இன்றளவும் கடைபிடித்து வரும் சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் மூலம் தான் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த மக்கள் கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்புப் பெறமுடிந்தது. இத்தகைய இடஒதுக்கீடு கூட பெரும்பாலும் கீழ்மட்டப் பணியிடங்களில் மட்டுமே அமலாக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாகஎஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பணியிடங்களை நிரப்பாமல் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து பொதுப்பிரிவினரைக் கொண்டு நிரப்புவதும் திட்டமிட்டு நடைபெறுகிறது.
உயர்மட்டப் பணியிடங்களிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல திறமையானவர்கள் சமூகப்பின்னணி காரணமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது. எனவேதான், பதவிஉயர்விலும் இடஒதுக்கீட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்றகோரிக்கை வலுத்து வருகிறது. சத்துணவு சமைக்கும் சமையலர் பணியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை நியமனம் செய்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாத சாதிஆதிக்க மனநிலை கொண்டதாகத்தான் இந்தியச் சமூகம் உள்ளது. இத்தகையச் சூழலில் இடஒதுக்கீடு மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் குறைந்தபட்ச நிவாரணமாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கும் வேட்டு வைத்துள்ளது.இந்திய சமூகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு இடஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமானஒன்று. மேலும், கீழிருந்து மேல்வரையுள்ள அனைத்து மட்டபணியிடங்களிலும் அனைத்து சமூகத்தினருக்கும் இடம் கொடுப்பதுதான் உயர்ந்தபட்ச ஜனநாயகமாக இருக்க முடியும். எனவே, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட வேண்டுமென இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் உரியசட்டம் இயற்றிட வேண்டுமென மத்தியஅரசை இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.