புதுதில்லி/ஸ்ரீநகர், ஆக. 9 - ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு வெள்ளியன்று காலை சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோரை ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைத்தது எதேச்சதிகார மோடி அரசு. காஷ்மீரில் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரி யாத நிலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியக்குழு உறுப்பினரும், கலைக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் சட்ட மன்றத்தின் உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமியை நேரில் சந்திக்க வும் அவரது உடல்நலன் குறித்து விசா ரிக்கவுமே சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும் வெள்ளியன்று காலை ஸ்ரீநகர் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளு மன்றத்தில் மோடி அரசு அராஜகமான முறையில் நிறைவேற்றியது. அது மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தையே சிதைக்கும் விதத்தில் இரண்டாக பிரித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019” -யையும் அராஜகமான முறையில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள மிருகபலத்தை பயன்படுத்தி நிறை வேற்றியது. முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெறி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் காஷ்மீர் மக்களின் அன்பைப் பெற்ற தலைவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது. நாடு முழுவதும், காஷ்மீர் மீதான மோடி அரசின் இந்த கொடூரமான தாக்கு தலை கண்டித்து கண்டனக் கனைகள் எழுந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) லிபரேசன், அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் ஆவேசமிக்க கண்டன இயக்கத்தை நடத்தின.
சீத்தாராம் யெச்சூரி அறிவிப்பு
இந்த நிலையில், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் யூசுப் தாரிகாமி எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தில்லியில் உள்ள கட்சித் தலைமையால் அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அங்கு தகவல் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டன. தாரிகாமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், தாரிகாமியை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து அறியவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் காஷ்மீர் மக்களைச் சந்தித்து விபரங்களை அறியவும், வெள்ளியன்று காலை ஸ்ரீநகர் செல்வதாகவும், கட்சித் தலைவர் என்ற முறையில் தனது கடமையை ஆற்றுவதற்கு அரசு நிர்வா கம் எந்தத் தடையும் ஏற்படுத்தாது என நம்புவதாகவும், மார்க்சிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜம்முகாஷ்மீர் ஆளுநர் சத்ய பால் சிங் மாலிக்கிற்கு வியாழனன்று மாலை கடிதம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து வெள்ளியன்று காலை சுமார் 10 மணியளவில் தில்லி விமானநிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றனர்.
விமான நிலையத்தில் சிறை வைப்பு
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய சீத்தாராம் யெச்சூரியும், து. ராஜாவும் உடனடியாக காவல்துறையின ரால் சிறை பிடிக்கப்பட்டனர். விமான நிலையத்திலிருந்து வேறு எங்கும் நகர்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. இதற்கு இரு தலைவர் களும், காவல்துறை அதிகாரிகளிடம் கடும் கண்டனம் தெரிவித்தனர். சுமார் 4 மணி நேரம் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே காவல்துறையினரின் பிடியில் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் பரவியவுடன் நாடு முழுவதும் உள்ள இடதுசாரி இயக்கங்களின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். கடும் கண்டனக் குரல் எழுந்தது. \
அரசியல் தலைமைக்குழு கண்டனம்
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்த கண்டன அறிக்கையில், “ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய வுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவும், காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இச்செயல் பாஜக அரசாங்கத்தின் எதேச்சதிகார முகத்தை காட்டுகிறது. இதற்கு எதிராக கண்டனம் முழங்குமாறு அழைப்பு விடுக்கிறோம்” என்று கூறியது.
தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டித்தது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீநகர் விமான நிலை யத்தில் தலைவர்கள் கைது செய்யப் பட்டது மத்திய பாஜக அரசின் எதேச் சதிகார போக்கு; ஜனநாயக விரோத செயல்பாடு என்று வன்மையாகக் கண்டித்தார். இரு தலைவர்களையும் கைது செய்த சட்டவிரோதச் செயலைக் கண்டித்து உடனடியாக கண்டனம் முழங்குமாறு கட்சி அணிகளுக்கும் தேச பக்த சக்திகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, தமிழகம் முழுவதும் வெள்ளியன்று மாலை உடனடியாக கட்சி அணிகளும் இடதுசாரி இயக்கங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
சீத்தாராம் யெச்சூரி பேட்டி
இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் தில்லிக்கே இரு தலைவர்களையும் திரும்பிச் செல்லுமாறு ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு கருத்து தெரிவித்த சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும், “விமான நிலையத்திலேயே எங்களை சிறை வைத்திருப்பது எங்களது ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகவும், மத்திய அரசு எங்களது அடிப்படை சுதந்திரத்தை ஒடுக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் காஷ்மீர் மக்களுடனான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் உறுதியான முறையில் தெரிவிக்கவிரும்புகிறோம்” என்று கூறினர்.
தாரிகாமிக்கு ஒரு கடிதம்
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்தவாறே, மார்க்சிஸ்ட் கட்சியின் காஷ்மீர் தலைவர் முகமது யூசுப் தாரிகாமிக்கு சீத்தாராம் யெச்சூரி ஒரு கடிதத்தையும் எழுதி, அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு தனது டுவிட்டர் பதிவின் வாயிலாகவும் வெளியிட்டார். பின்னர் ஸ்ரீநகர் விமான நிலையத்தி லிருந்து தில்லிக்கு கட்டாயமாக திரும்பிச் செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். கடும் கண்ட னத்தை பதிவு செய்துள்ள நிலையில், இரு தலைவர்களும் தில்லி திரும்பினர்.
தில்லி விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, “ஸ்ரீநகர் விமானநிலையத்தில் சிறை வைத்த காவல்துறை அதிகாரிகள், அடுத்த விமானத்திலேயே திரும்பி தில்லிக்கு சென்றுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். நாங்கள் எங்களது கட்சித் தலைவரையும் தோழர்களையும் பார்ப்பதற்காக வந்திருக்கிறோம். அவர்களது உட ல்நலனை விசாரிக்க வந்திருக்கிறோம். அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து, திரும்பிச் செல்ல மறுத் தோம். காஷ்மீரில் எல்லாம் இயல்பு நிலையில் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக் கிறார்கள். அப்படியானால் எங்களை அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக் கிறது என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரம் எங்களை சிறை வைத்திருந்தார்கள். இதுதான் இன்றைக்கு காஷ்மீரின் உண்மை நிலை. இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். காஷ்மீரில் எல்லாம் இயல்பாக இருக்கிறது என்றும் அங்கே தடை உத்தரவு ஏதும் இல்லை என்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் உண்மையில் அங்கே மொத்த காஷ்மீரும் பாதுகாப்பு படைகளின் கைகளில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை இன்று நாங்கள் கண்கூடாக பார்த்துவிட்டோம். காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் கடுமையான அடக்கு முறையால் சூழப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
காஷ்மீரில் மத்திய அரசு தொடுத்துள்ள கொடூர அரசியல் தாக்குதலைக் கண்டித்தும், மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருப்பதையும் இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா ஆகியோரை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்து சிறைப்பிடித்ததையும் கண்டித்து ஆகஸ்ட் 9 வெள்ளியன்று சென்னையில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மூத்த தலைவர் ஏ.எஸ்.குமார் மற்றும் தென் சென்னை, வடசென்னை மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
9-8-2019 12:55 மணி ஸ்ரீநகர் விமான நிலையம்
அன்புத் தோழர் யூசுப்...
நான் உங்களை பார்க்க ஸ்ரீநகர் வந்தேன். உங்களைச் சந்திப்பதன் வாயிலாக காஷ்மீர் மக்களுக்கு எனது ஆதரவையும், ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்க நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்ற செய்தியையும் சொல்வதற்காக வந்தேன். ஆனால் அதிகாரிகள் எங்களை விமான நிலையத்திலேயே சிறை வைத்துவிட்டார்கள். என்னோடு தோழர் து.ராஜா இருக்கிறார். காவல்துறை அதிகாரிகளுக்கு, எங்களை ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழையவிடவேண்டாம் என்று உத்தரவு வந்திருக்கிறது. நாங்கள் உங்களை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு அனுமதி மறுக்கப்படுமானால், குறைந்தபட்சம் இந்தக் கடிதமாவது உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன்.
லால் சலாம்
- சீத்தாராம்