புதுதில்லி:
சீட்டு நிதி நிறுவன திருத்தச் சட்டமுன்வடிவில் ஏராளமான ஓட்டைகள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் புதனன்று, சீட்டு நிதி நிறுவனத் திருத்தச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது: சீட்டு நிதி நிறுவனத்துறையை மேலும் அதிகமான அளவில் முறைப்படுத்தக் கூடியவிதத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிற 2019ஆம் ஆண்டு சீட்டு நிதி நிறுவன (திருத்தச்)சட்டமுன்வடிவின் நோக்கம் பாராட்டத் தக்கது. ஆனாலும் இந்தச் சட்டமுன்வடிவில் ஏராளமான ஓட்டைகள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவில் இன்சூரன்ஸ் பாதுகாப்பு தொடர்பாக ஷரத்து எதுவும் இல்லை. சாரதா சீட்டுநிதி நிறுவனத்தில் நடைபெற்ற மோசடியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2013 ஏப்ரலில் அது தகர்ந்துபோவதற்கு முன்பு அதில் பணத்தை சேமித்த 17 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டார்கள். இவ்வாறு மாபெரும் மோசடி நடைபெற்றுள்ள போதிலும், இத்தகைய மோசடித் திட்டங்களை (ponzy schemes) முறைப்படுத்திடும் விதத்தில் வலுவானதொரு நிர்வாக ஏற்பாடு மேற்கொள்ளப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமாகும். இவ்வாறு ஒரு முறையான நிர்வாக ஏற்பாடு இல்லாத காரணத்தினால், சீட்டுநிதி நிறுவனங்கள் தாங்கள் செய்கின்ற மோசடிகளிலிருந்து மிகவும் எளிதாக தப்பித்துக் கொண்டுவிடுகின்றன. பல சமயங்களில் இவ்வாறு சீட்டு நிதி நிறுவனங் களை நடத்தக்கூடியவர்கள், தாங்கள் வசூலித்த பணத்துடன் காணாமலே போய்விடுகிறார்கள். சீட்டு நிதி நிறுவன லாபங்கள் உலகஅளவில் நடைபெறும் பண மோசடி நடவடிக்கைகளில் (money laundering activities) பயன்படுத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது. நிதி மேலாண்மை குறித்த கல்வி பலவீனமாக இருப்பதும்இந்தத்துறையில் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இன்சூரன்ஸ் பாதுகாப்புக்கு ஷரத்து எதுவும் இல்லாது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு, பற்கள் இல்லாத புலியைப் போன்றது. இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)