புதுதில்லி:
ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியிலிருந்து, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிரூபாயை மத்திய அரசு பறித்துக் கொண்டதானது, நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத் தாக முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் ரூ. 9 லட்சம் கோடிஉபரி நிதி உள்ளது. இதில் சுமார் 3 லட்சம்கோடி ரூபாயை கேட்டு, கடந்த இரண்டுஆண்டுகளாகவே, ரிசர்வ் வங்கிக்கு மோடி அரசு தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வந்தது.இதில் ஏற்பட்ட முரண்பாட்டில், ரிசர்வ்வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவியையே ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார். துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா உள்ளிட்ட இன்னும் சில அதிகாரிகளும் பணியிலிருந்து விலகிக் கொண்டனர்.இது மத்திய அரசுக்கு வசதியாகப் போகவே, சக்திகாந்த தாஸை ரிசர்வ்வங்கியின் புதிய ஆளுநராக நியமித்த மோடி அரசு, கையிருப்பைச் சூறையாடுவது குறித்து திட்டமிட, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில், குழு ஒன்றையும் கடந்த 2018 டிசம்பரில் அமைத்தது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைஆளுநர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் உள்ளிட்ட 6 பேரைகொண்ட அந்தக் குழு, எதிர்பார்த்தபடியே, ரூ.1 லட்சத்து 50 லட்சம் கோடி முதல் ரூ. 3 லட்சம் கோடி வரை, 3 ஆண்டுகளில் படிப்படியாக மத்திய அரசுக்கு அளிக்கலாம் என பரிந்துரை வழங்கியது.அதன் முதற்கட்டமாகத்தான், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்குவதற்கு, மோடி அரசால் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் திங்களன்று அனுமதி வழங்கியுள்ளார்.இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பொருளாதார வல்லுநர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ரிசர்வ் வங்கி தன்வசம் கொண்டுள்ள ரிசர்வ் தொகையானது, பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்கூட, ரிசர்வ் வங்கியின் கையிருப்பையும் கருத்தில் கொண்டுதான் முதலீடுகளை மேற்கொள்வார்கள். சர்வதேச செலாவணி நிதியம்கூட, ரிசர்வ்வங்கியின் கையிருப்பைப் பார்த்துத் தான், நமது நாட்டிற்கு கடன் வழங்கும். எனவே, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட வேண்டும்தான். அதற்காக ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியின் மூலமே அதை எட்ட நினைப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது” என்று கூறியுள்ளனர்.
பல நாடுகள் அவர்களின் மத்தியவங்கிப் பணத்தை இப்படி அவசரப் பட்டு வாங்கித்தான் திவால் ஆனார்கள். முக்கியமான நாடுகள் திடீர் என்று வறுமையில் விழுந்ததற்கும் இப்படி உபரிநிதியை அவசரமாக பயன்படுத்தியதுதான் காரணம் என்று சுட்டிக்காட்டியுள் ளனர்.திடீர் என்று உலக அளவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டால் அப்போது நமக்கு உதவுவதற்கு ஆர்பிஐ-யும்கூட வர முடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகிறார்கள்; இதனால்வரும் மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.