மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக 2010இலும், பின்னர் 2015இல் மேம்படுத்தப்படுவதற்காகவும் ஒரு நபரைக் குறித்து பதினைந்துவிதமான விவரங்கள் தொகுக்கப்பட்டன. நபரின் பெயர், குடும்பத்தில் அவருக்குள்ள உறவு, தந்தை பெயர், தாயார் பெயர், (மணமாகியிருந்தால்) கணவன் அல்லது மனைவியின் பெயர், பாலினம், பிறப்பிடம், மணமானவரா, அவருடைய பிறப்பிடம், (பிரகடனம் செய்யப்பட்ட) நாட்டினம், வழக்கமாக்க் குடியிருக்கும் தற்போதைய முகவரி, தற்போதைய முகவரில் வசித்திடும் காலத்தின் விவரம், நிரந்தர இருப்பிட முகவரி, தொழில்/செயல்பாடு (occupation-activity) மற்றும் கல்வித் தகுதி ஆகியவை அப்போது கோரப்பட்டிருந்தன.
ஆனால், ஆட்சியாளர்களின் சூழ்ச்சித்திட்டங்களின் ஒரு பகுதியாக, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கும் அத்துடன் சேர்த்தே விவரங்களைத் தொகுத்திடும் விதத்தில், ஒரு சோதனை முயற்சியாக, செப்டம்பரில் 30 லட்சம் மக்களிடம் தரவுகள் தொகுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட படிவத்தில், பெற்றோர்களின் பிறப்பிடங்கள் என்னும் பகுதியில், “தந்தையின் பிறப்பிடம், தாயாரின் பிறப்பிடம், கடைசியாக இருந்த இருப்பிடம்” ஆகியவற்றுடன், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண், ஓட்டுநர் உரிம்ம் எண் ஆகியவையும் கோரப்பட்டிருந்தன. வரவிருக்கும் மக்கள்தொகைப் பதிவேட்டின்போது பதிவு செய்வதற்காக, ஒரு சோதனை முயற்சியாக மேற்கண்ட விவரங்களை செப்டம்பரில் நடைபெற்ற பதிவின்போது அரசுத்தரப்பில் செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையிலேயே வரவிருக்கும் மக்கள்தொகைப் பதிவேடு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு 2020 தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காகச் சேகரிக்கப்படும் தகவல்களிலிருந்தே, இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRIC-National Register of Indian Citizens) விவரங் களையும் எடுத்துக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் சூழ்ச்சியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை மேம்படுத்துவதற்காக, 3,941.35 கோடி ரூபாய் ஒதுக்கிட, செவ்வாய் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பல சமயங்களில் இந்த மக்கள்தொகைப் பதிவேட்டிற்காக சேகரிக்கப்படும் விவரங்களிலிருந்து, இந்தியத் தேசியக் குடிமக்கள் பதிவேடு அல்லது தேசியக் குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறது.
(ந.நி.)